ஆங்கில வழி கல்வி: 59 பள்ளிகள் பொதுத்தேர்வுக்கு தயார்!

கோடை : அரசு ஆங்கில வழி கல்வித்திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ்1 பொதுத்தேர்வை, 59 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக அரசு சார்பில்,
அரசுப்பள்ளிகளில் ஆங்கில கல்வித்திட்டம், கடந்த 2012-13 கல்வியாண்டில் துவங்கப்பட்டது. ஒன்று, ஆறாம் வகுப்புகளில், தனி பிரிவாக துவங்கப்பட்டு, ஆங்கிலவழி கல்விக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. குறைந்தபட்சம் 5 முதல், 15 மாணவர்கள் சேர்ந்தால் கூட, வகுப்பு நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி, வரும் கல்வியாண்டில், 59 பள்ளிகள்,பொதுத்தேர்வை சந்திக்க உள்ளன.கோவை மாவட்டத்தில், 21 அரசுப்பள்ளிகளில், ஏற்கனவே ஆங்கில வழி பிரிவுகள் உள்ளன. இதுதவிர, 50 அரசு ஆங்கில வழிப்பள்ளிகள், பத்தாம் வகுப்பில், தற்போது காலடி எடுத்து வைத்துள்ளன.மேலும், 9 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், வரும் 2017- 18 கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வை சந்திக்கின்றன. இவர்களுக்கு, மொழித்திறன் மேம்படுத்துதல், சிறப்பு பயிற்சி வகுப்பு மூலம், தேர்வுக்கு தயார்ப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசுப்பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் கையாள, பிரத்யேக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் நடைமுறை பின்பற்றப்படுவதால், மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒன்பதாம் வகுப்பிலும், 'பெயில்' போட உத்தரவு இல்லை. இவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கொண்டு தான், ஆங்கில வழி பள்ளிகளின் கற்பித்தல் தரம் பரிசோதிக்கப்படும்.'கோவை மாவட்டத்தில், வரும் 2017-18 கல்வியாண்டில், 50 அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் இருந்து, 450 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். பிளஸ் 1 பொதுத்தேர்வில், ஒன்பது அரசு ஆங்கில வழி பள்ளிகள் பங்கேற்கவுள்ளன,'' என்றார்.