4 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை

சென்னை: 'தமிழகத்தில், உள்கட்டமைப்பு வசதி இல்லாத நான்கு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது' என, மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலுாரில் உள்ள, அன்னை மருத்துவக்

கல்லுாரி; சென்னை மாதா மருத்துவக் கல்லுாரி மற்றும் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் கல்லுாரிகளில், போதுமான வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என, புகார் எழுந்தது. கடந்த, 2016ல், இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
'ஓராண்டுக்குள் வசதிகளை செய்ய வேண்டும்' என்ற நிபந்தனையுடன், 2016 - 17ல், எம்.பி.பி.எஸ்., படிப்பில் தலா, 150 மாணவர்களைச் சேர்க்க, அனுமதி அளித்தனர். ஆனால், நிபந்தனை காலத்திற்குள் வசதிகளை மேம்படுத்தவில்லை. அதனால், எம்.சி.ஐ., பரிந்துரைப்படி, மூன்று மருத்துவக் கல்லுாரிகளுக்கும், 2017 - 18, 2018 - 19 என, இரு கல்வியாண்டுகளில் மாணவர் சேர்க்கை நடத்த, தடை விதிக்கப்பட்டு உள்ளது.அதேபோல, கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரிக்கு, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாணவர் சேர்க்கைக்கு, ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, அந்தந்த கல்லுாரிகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அனுப்பியுள்ள கடிதம்:
போதுமான கட்டுமான வசதிகள் இல்லாததால், எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. தற்போது படித்து வரும் மாணவர்களுக்கு வைப்பு நிதியாக, 2 கோடி ரூபாயை, வங்கியில் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.