பிளஸ் 1 பொதுத்தேர்வு: குழு அமைப்பு

பிளஸ் 1 பொது தேர்வுக்கான விதிமுறைகளை உருவாக்க, வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில், விதிகளை இறுதி செய்ய, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், சமச்சீர் கல்வி மாணவர்களால், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத்தேர்வுகளில், போதிய அளவு தேர்ச்சி பெற முடியவில்லை. மற்ற மாநில மாணவர்களை விட, தமிழக மாணவர்கள் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை நடத்திய ஆய்வில், மேல்நிலை பள்ளி மாணவர்கள், பிளஸ் 1 பாடங்களை சரியாக படிப்பதில்லை என, தெரிய வந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 1 பொது தேர்வை எப்படி நடத்துவது; அதற்கான விதிகள் என்ன; எந்த பாடங்களில், எத்தனை கேள்விகள் இடம் பெற வேண்டும்; எந்தெந்த பாடங்களில், எத்தனை மதிப்பெண்ணுக்கான கேள்விகள் இடம் பெற வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை சார்பில் விதிகள் வகுக்கப்பட உள்ளன. இதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், அறிவொளியை, ஒருங்கிணைப்பாளராக்கி, கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதில், அரசு தேர்வுத்துறையின் முன்னாள் இயக்குனர், தேவராஜன் தலைமையில், தேர்வுத்துறை மேல்நிலை இணை இயக்குனர், சேதுராமவர்மா; ஓய்வு பெற்ற இணை இயக்குனர், ராமராஜ்; துணை இயக்குனர்கள், வாசு, பூபதி மற்றும் ஷமீம் ஆகியோர் இடம்
பெற்றுள்ளனர்.ஒவ்வொரு துணை இயக்குனர்களின் கீழும், ஆறு பாடங்களிலும், திறமையான வினாத்தாள் தயாரிப்பில் அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் அடங்கிய துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வல்லுனர் குழுவின் முதல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. முதல் கட்டமாக, பொதுத்தேர்வு மற்றும் அரசின் கொள்கைகள் குறித்து, ஆலோசனை நடந்தது.
இன்றும், நாளையும் கூட்டம் தொடர்ந்து நடக்கிறது. மூன்று நாட்களில், விதிமுறைகள் இறுதி
செய்யப்பட உள்ளது. பின், துணை குழுக்கள் மூலம், மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அவை, எஸ்.சி.இ.ஆர்.டி., மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், வினா வங்கியாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.