சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு கூடுதல் பாடம் சேர்ப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், 10ம் வகுப்புக்கு கூடுதலாக, ஒரு பாடம் சேர்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து வரும், பள்ளி அளவிலான தேர்வும், 'கிரேடு' முறையும் ரத்து செய்யப்பட உள்ளது. வரும் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கு பதில், ஆறு பாடங்களாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து பள்ளிகளுக்கும் சி.பி.எஸ்.இ., வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களுடன், தொழிற்கல்வியில் ஒரு பாடம் கட்டாயம் என, கூறப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வில், தொழிற்கல்வி, மொழிப்பாடம் தவிர, மற்ற மூன்று முக்கிய பாடங்களில் ஏதாவது ஒன்றில், மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், அதற்கு பதில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பெற்ற மதிப்பெண் சேர்க்கப்பட்டு, தேர்ச்சி செய்யப்படுவர். இது, மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்படும் என, கூறப்பட்டுள்ளது.