எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் BSNL இணைப்பு

மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், வீடு தேடி வந்து, இன்டர்நெட் மற்றும் தரைவழி தொலைபேசி இணைப்பை தரும் புதிய திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்ய உள்ளது. சந்தையில் நிலவும் கடும் போட்டி காரணமாக, பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால், அதன் தரைவழி மற்றும் மொபைல் போன் இணைப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவர, மேலும் ஒரு புதிய திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்ய உள்ளது. 


இது குறித்து, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட, சென்னை தொலைத்தொடர்பு வட்ட அதிகாரிகள் கூறியதாவது: டிசம்பரில் அறிமுகம் செய்த, 249 ரூபாய் மாத கட்டணத்தில், அளவற்ற, 'பிராட்பேண்ட் இன்டர்நெட்' பயன்படுத்தும் திட்டம், இதுவரை எந்த நிறுவனமும் தராத வகையிலானது. இதில், ஒரு ரூபாய்க்கு, ஒரு, 'ஜிபி' இன்டர்நெட் பயன்பாடு கிடைக்கும். இத்திட்டம், அதிகம் பேரை சென்றடையவில்லை. இதுபோல், ஏராளமான திட்டங்கள் உள்ளன. 
இதுபற்றி தெரிந்தாலும், இணைப்பை பெற, அலுவலகத்தை தேடிச் செல்ல வேண்டுமே என, பலர் தயங்குகின்றனர். இதை கருத்தில் கொண்டு, மொபைல் போனில், குறிப்பிட்ட எண்ணுக்கு, பொதுமக்கள், எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், ஊழியர்கள் அவர்களின் வீடு தேடி சென்று, புதிய இணைப்பை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளோம்.அதற்கான பிரத்யேக, மொபைல் போன் எண் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.