அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்..

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு
பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியது.
இந்தச் சங்கத்தின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் திட்டக்குடியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கடலூர் மாவட்டச் செயலர் பொன்னுசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகச் செயலர் ராஜ்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், சென்னையில் வருகிற 7-ஆம் தேதி மாநில சங்கம் சார்பில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பி.எட்., கணினி ஆசிரியர்களும் கலந்துகொள்வது, அரசுப் பள்ளிகளில்
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப் பாடமாக வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும், சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்காக அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு உடனே வழங்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் ஆனந்த் நன்றி கூறினார்.