அரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி

அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வழக்கம்போல், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என,
எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால், 'கொளுத்தும் வெயில் காரணமாக, ஜூன் 7ல் பள்ளிகள் திறக்கப்படும்' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பஸ் பாசை பயன்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்கான பஸ் பாஸ், பள்ளிக்கூடம் திறந்த பின்தான் வழங்கப்படும்.வரும், 7ல் இருந்து பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்கள், பழைய பாசில் செல்லலாமா என்பதை அறிவதில் ஆர்வமாக உள்ளனர்.
இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பாசில், வரும் ஜூலை மாதம் இறுதி வரை சென்று வரலாம்' என்றனர்.