மாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் பணி நியமனத்துக்கு தடை; ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், மோகன்குமார் உள்பட 8 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
நேரடி நியமனம்
நாங்கள் 1985 முதல் 1990–ம் ஆண்டு வரை பல்வேறு ஆண்டுகளில், உடல் கல்வி ஆசிரியராக பல்வேறு பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்பட்டோம். தற்போது முதல் நிலை உடல் கல்வி இயக்குனராக பதவி வகித்து வருகிறோம். எங்களுக்கு மாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பொதுவாக மாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் பதவிக்கு, 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமாகவும் நியமிக்கப்படுவார்கள்.
ஆனால், இந்த முறையை நிராகரித்து விட்டு, மாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் பதவிக்கு நேரடியாக நியமனம் செய்யும் நடவடிக்கையில் பள்ளிக்கல்வி இயக்குனர் மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக கடந்த மே மாதம் நேரடி தேர்வு முறைக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தடை
எனவே, இந்த அறிவிப்புக்கும், மாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் பதவிக்கு நேரடியாக நியமனம் மேற்கொள்வதற்கும் தடை விதிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘மாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் பதவிக்கு மேற்கொள்ளப்படும் தேர்வு நடவடிக்கை தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த மனுவுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும். விசாரணையை ஜூன் 12–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், மாவட்ட உடல் கல்வி ஆய்வாளர் பதவிக்கான நியமனத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.