திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,
புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 409
மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு 2018 மே மாதம் வரையிலான தற்காலிக அங்கீகாரம்
வழங்கும் நிகழ்ச்சி திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில் நேற்று நடைபெற்றது.
பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது,
“வரும் கல்வி ஆண்டு முதல் 6-ம்வகுப்பிலேயே கணினிப் பாடம் நடத்தப்படவுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு அவர்களது விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு
வழங்கப்படவுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும்
வகையில் ரூ.2.13 கோடியில் மாவட்டந்தோறும் ஐஏஎஸ் பயிற்சி மையம்
ஏற்படுத்தப்படவுள்ளது” என்றார்.நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி
தலைமை வகித்தார்.
மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
எஸ்.வளர்மதி, அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், எம்பி-க்கள் ப.குமார்,
டி.ரத்தினவேல், சந்திரகாசி, எம்எல்ஏ-க்கள் ஆர்.டி.ராமச்சந்திரன்,
தமிழ்ச்செல்வன், ராமஜெயலிங்கம், பரமேஸ்வரி, எஸ்ஆர்வி கல்வி நிறுவன செயலாளர்
சாமிநாதன், தமிழ்நாடு நர்சரி- பிரைமரி- மெட்ரிகுலேசன்- சிபிஎஸ்இ பள்ளிகள்
சங்கப் பொதுச் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் பேசினர்.முன்னதாக,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமிவரவேற்றார். 9 மாவட்டங்களைச்
சேர்ந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது:
10 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படும். நிதிநிலைக்கு ஏற்ப பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம்
உயர்த்தப்படும். வரும் கல்வி மானியக் கோரிக்கையின்போது நாடே வியக்கும்
அளவுக்கு கல்வித் துறையில் மேலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்
என்றார்