அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி'
மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி களுக்கு அறிவுறுத்தப்பட்டு
உள்ளது.தமிழகத்தில் உள்ள, ௩௭ ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு, அரசு உதவி
பெறும் பள்ளிகளில், ௪௧ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த பள்ளிகளில், இன்னும், 50 சதவீத மாணவர்கள் படிக்கும் வகையில், உள்
கட்டமைப்பு வசதியும், ஆசிரியர்கள் எண்ணிக்கையும் உள்ளது. ஆனால், ஆங்கில
மொழி திறன் வளர்ச்சி, முன்னேறிய கற்பித்தல் முறை இல்லாததால், பெற்றோர்,
பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர்
சேர்க்கையை உயர்த்தவும், கற்பித்தல் முறையை முன்னேற்றவும், பள்ளிக்
கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, தொடக்க பள்ளிகளில் மாணவர்களை
சேர்ப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளுக்கு
உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆட்டோ விளம்பரம் செய்யவும், அரசு பள்ளிகள் தரம்
பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும், பாடல்கள், குறும்படங்களை ஒளிபரப்பவும்,
வாட்ஸ் ஆப், கேபிள், 'டிவி' மற்றும் தியேட்டர்களில் விளம்பரம் செய்யவும்,
தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.