கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் தயாரிக்க உத்தரவு

அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், இட ஒதுக்கீடுப்படி, தரவரிசை தயாரித்து, மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிந்த நிலையில், அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிந்து, 10 வேலை நாட்கள் வரை விண்ணப்பம் வழங்கப்பட வேண்டும் என, கல்லுாரிகளுக்கு, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 25ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

அதன்பின், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 10 நாட்களில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.
இது குறித்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், உயர் கல்வித்துறை சார்பில், கல்லுாரி கல்வி இயக்குனர், மஞ்சுளா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன் விபரம்:

● கல்லுாரி விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டில், பாடப் பிரிவுகளின் கட்டண விபரங்கள் இடம்பெற வேண்டும்
● மாணவர் சேர்க்கை கமிட்டி அமைத்து, இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்ற வேண்டும். மதிப்பெண் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் தயாரிக்க வேண்டும். இதில், எந்த விதிமீறலும் இருக்க கூடாது
● முதலில், அரசு உதவி பெறும் பாடப் பிரிவுகளுக்கு, மாணவர் சேர்க்கையை முடித்த பிறகே, சுயநிதி பாடப் பிரிவுகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும்
● சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத் திட்டங்களில், தேர்வு முடிவு வர தாமதமானால், அந்த மாணவர்களுக்கு, கூடுதல் கால அவகாசம் தர வேண்டும்
● பிளஸ் 2 தேர்வு முடிவு, இணையதளத்தில் வெளியான தேதியிலிருந்து, 10 நாட்களுக்குள், மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை பரிசீலித்து, 14 முதல், 20 நாட்களுக்குள், இட ஒதுக்கீடுப்படி, தரவரிசை பட்டியல் தயாரித்து, அதை கல்லுாரியின் தகவல் பலகையில், விண்ணப்பதாரர்களுக்கு தெரியும்படி அறிவிக்க வேண்டும்
● விண்ணப்பத்தில், ஏதேனும் விடுபட்டிருந்தால், மாணவர்களுக்கு தகவல் அளித்து, அதை தாக்கல் செய்ய, அதிகபட்சம், இரண்டு நாட்கள் அவகாசம் தர வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.