பள்ளி வாகனங்கள் ஆய்வு: 12 சதவீதம் தகுதி இழப்பு

பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வில், 12 சதவீத வாகனங்கள் தகுதி அற்றவை என, நிராகரிக்கப்பட்டு விட்டதாக, போக்குவரத்துத் துறை ஆணையரகம் தெரிவித்து உள்ளது. 


சென்னை, சேலையூரில், தனியார் பள்ளி வாகனத்தின் ஓட்டை வழியே விழுந்து, மாணவி ஒருவர் உயிரிழந்தார். அதை தொடர்ந்து, போக்குவரத்து, தீயணைப்பு, வருவாய், நிர்வாகம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் இணைந்த குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும், பள்ளி வாகனங்களை, ஆய்வு செய்து வருகிறது.
இம்மாதம், முதல் வாரத்தில் ஆய்வு பணி தொடங்கியது. வாகனங்களின் படிக்கட்டுகள், அவசர காலக் கதவு, முதலுதவி பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி, ஓட்டு னரின் கண் பார்வை, உடல் தகுதி உள்ளிட்ட, 16 பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, சோதனை செய்யப்படுகிறது. இந்த ஆய்வு பணியை, இம்மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள, 28 ஆயிரத்து, 962 பள்ளி வாகனங்களில், நேற்று முன்தினம் வரை, 88 சதவீத வாகனங்கள் மட்டுமே, ஆய்வில் தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளன. இந்நிலையில், பள்ளி திறக்கும் தேதி, ஜூன், 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதால், இந்த வாரத்திற்குள், குறைபாடு உள்ள அனைத்து வாகனங்களையும் சரி செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது