வீடுகளில் மின் விளக்கு இல்லை : 10ம் வகுப்பில் சாதித்த மாணவியர்

கொளத்துார் மலை அடிவார கிராமத்தில், மின்விளக்கு வசதி இல்லாத வீடுகளில் வசிக்கும் மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், கொளத்துார் அருகே, பச்சபாலமலை அடிவாரம், நீதிபுரத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 212 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், 42 பேர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேன்மொழி, 484, ஸ்ரீநிதி, 482, கோமதி, 479 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். சமூக அறிவியலில், 10 பேர், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 



நீதிபுரம் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளியில் முதலிடம், மூன்றாமிடம் பிடித்த, மாணவியர் தேன்மொழி, கோமதி வீடுகள் மலை அடிவாரத்தில் உள்ளன. அவர்கள் வீடுகளில், மின்விளக்கு வசதி கிடையாது. உறவினர் வீடுகளில் உள்ள மின்விளக்கு வெளிச்சத்தில் படித்து, 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.பள்ளியில், மாதந்தோறும் படிப்பு தொடர்பாக, மாணவர்கள் மீது பெற்றோர் சொல்லும் குற்றச்சாட்டு, பெற்றோர் மீது மாணவர் கூறும் குற்றச்சாட்டுகளை கேட்டு, அதற்கான ஆலோசனை வழங்குவோம். மாணவர்கள், பெற்றோர் கொடுத்த ஒத்துழைப்பு, ஆசிரியர்கள் உழைப்பு ஆகியவற்றால், இப்பள்ளி சாதனை படைத்துள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினர்.