மருத்துவ சிகிச்சைக்காக PF - ல் இருந்து பணம் எடுக்க டாக்டர் சர்டிபிகேட் தேவையில்லை

மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும், உடல் ஊனமுற்றோர் கருவிகள் வாங்குவதற்கும் டாக்டர் சர்டிபிகேட் இல்லாமல் பிஎப்பில் இருந்து பணம் எடுக்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் பிஎப் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இதில் இருந்து வீடு வாங்க, மருத்துவ சிகிச்சை, திருமண செலவுகளுக்கு பணம் எடுத்துக்கொள்ளலாம். மருத்துவ சிகிச்சை பெறுவோர், இதற்கான பிஎப் திட்டம் பத்தி 68ஜெ-யின் படி ஒரு மாதம் அல்லது மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது, பெரிய அறுவை சிகிச்சைகள், டி.பி, பக்கவாதம், புற்றுநோய், இதய சிகிச்சை போன்றவற்றுக்கு மருத்துவர் சான்று சமர்ப்பித்து பணம் பெறலாம்.
இதுபோல் உடல் ஊனம் அடைந்தவர்கள் பத்தி 68என் விதியின்படி சான்று சமர்ப்பித்து அதற்கான கருவிகள் வாங்க பிஎப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். தற்போது பிஎப் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனவே, மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்கு பிஎப் நிதியில் இருந்து பணம் பெற விரும்பும் ஊழியர்கள் சான்று சமர்ப்பிக்க தேவையில்லை. இதற்கான திருத்தங்கள் பிஎப் விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொழிலாளர் அமைச்சகம் இந்த மாதம் 25ம் தேதியிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது என பிஎப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவ சிகிச்சை மற்றும் உடல் ஊனத்துக்கான உபகரணம் வாங்க ஊழியர்கள் 6 மாத அடிப்படை சம்பளம் மற்றும் டி.ஏவுக்கு மிகாமல் பெற்றுக்கொள்ள முடியும்.