பி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்

இந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்-
லைன் பதிவு திங்கள்கிழமை (மே 1) முதல் தொடங்க உள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் (பி..) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இந்தக் கல்வியாண்டுக்கான (2017-18) கலந்தாய்வு அறிவிப்பைப் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது. பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
முதலில் விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும், பின்னர் பொதுப் பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெறும்.
இதற்கான ஆன்-லைன் பதிவு மே 1-ஆம் தேதி தொடங்குகிறது. ஆன்-லைன் பதிவுக்கு மே 31 கடைசித் தேதி.
ஆன்-லைனில் பதிவு செய்த பிறகு அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் அல்லது நேரடியாக பல்கலைக்கழக மையத்தில் சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசித் தேதியாகும்.
விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூன் 20-இல் வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்படும்.
இதறகான அறிவிக்கையை பல்கலைக்கழகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) வெளியிட உள்ளது.
விண்ணப்பக் கட்டணம் குறைக்கப்படுமா?
பி.. கலந்தாய்வுக்கு ஆன்-லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பக் கட்டணம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகளிடையே எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு கடந்த 2015-16 கல்வியாண்டு வரை அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. அதனுடன் 530 பக்கங்களைக் கொண்ட தகவல் கையேடு ஒன்றும் வழங்கப்பட்டது. இதனால் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரிடம் ரூ.250 வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் பல்கலைக்கழகத்துக்கு ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை வருவாய் கிடைத்தது.
இந்நிலையில், 2016-17 கல்வியாண்டு முதல் ஆன்-லைன் பதிவு முறையை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு செலவு குறைந்துள்ளது.
கலந்தாய்வு நடைபெறும் 40 நாள்கள் வளாகம் முழுவதும் போடப்படும் பந்தல், மின் விசிறி வசதிகளுடன் ஆயிரம் பேர் வரை அமரக் கூடிய வகையிலான அரங்கு, எல்..டி. திரை, கணினிகள், மின்சாரக் கட்டணம், இடத்துக்கான வாடகை, விண்ணப்பத்தை அச்சடிக்க ஆகும் செலவு அதிபட்சம் ரூ. 2 கோடி ஆகும்.
2016-17 கல்வியாண்டு முதல் விண்ணப்பம் அச்சடிப்பதில்லை என்பதால், செலவில் ரூ. 50 லட்சம் வரை குறைந்திருக்கும். மீதமுள்ள தொகை அனைத்தும் பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கும் லாபம்தான்.
எனவே, தாராளமாக விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்கலாம் என்பதோடு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தை ரத்து செய்யலாம் என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.

கட்டணக் குறைப்பு தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தியபோதும், அதுதொடர்பான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே, விண்ணப்பக் கட்டணம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏழை மாணவர்களிடையே எழுந்துள்ளது.