புதிய குடும்ப அட்டைக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு இணைய சேவை மையங்கள் மூலம் புதிய குடும்ப அட்டை பெற வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று
தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் மூலம் இப்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இணைய சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இச்சேவை மையங்கள் மூலம் வருமானம், ஜாதி, இருப்பிடம், இறப்புச் சான்றுகள் என பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன.
இச்சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, சென்னை பெருநகர குடிநீர் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரி ஆகியவற்றைச் செலுத்தவும் வழி செய்யப்பட்டுள்ளது. வரும் 24 முதல் சேவை: அரசு இணைய சேவை மையங்கள் மூலம் மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளைப் பொது மக்கள் தங்களது இல்லங்களின் அருகிலேயே பெற்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, வரும் 24-ஆம் தேதி முதல் அரசு இணைய சேவை மையங்கள் வாயிலாக புதிதாக குடும்ப அட்டை பெறவும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம், செல்லிடப்பேசி எண் மாற்றம் போன்ற சேவைகள் வழங்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.