தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்

அரசு மருத்துவர்களுடன், தொலைபேசி வழியாக, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வகையிலான திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னை, போரூர் ராமச்சந்திரா பல்கலையின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தங்கப் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

எம்.பி.பி.எஸ்., மாணவி உமா ரவிச்சந்திரனுக்கு, சிறப்பாக தேறியதற்காக, ஐந்து தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பல்கலையின் வேந்தர், பட்டம் பெற்ற, 365 மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கினார்.

பதக்கங்களை வழங்கி, வெங்கையா நாயுடு பேசியதாவது: அரசு மருத்துவமனை இணையதளங்களின் வழியாக, மருத்துவர்களின் சந்திப்பு, மருத்துவ ஆய்வு அறிக்கைகள், தேவையான ரத்த வகைகளை அறிந்து கொள்ள, விரைவில் புதிய வசதிகள் செய்யப்படும். மேலும், சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை, தொலைபேசி வழியாக, டாக்டர்களிடம் தெரிந்து கொள்ளவுமான வசதிகளும், விரைவில் துவக்கப்படும். நம் மருத்துவர்கள், அமைதியாகவும், பொறுமையாகவும், மனிதாபிமானத்துடனும், மருத்துவம் செய்கின்றனர். அதனால், வெளிநாடுகளில் இருந்து பலர், மருத்துவ சுற்றுலாவுக்காக, சென்னை உள்ளிட்ட இந்திய பகுதிகளுக்கு வருகின்றனர்.ஆனாலும், நாட்டில், 1,668 பேருக்கு, ஒரு அலோபதி மருத்துவர் தான் உள்ளார். அதில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.இவ்வாறு அமைச்சர் பேசினார். 

பல்கலை துணைவேந்தர் மூர்த்தி பேசுகையில், ''இந்திய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், 39வது இடம்; தேசிய தர மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலின் தேர்வில், 3.62 புள்ளிகளுடன், 'ஏ கிரேடு' பெற்று, ராமச்சந்திரா பல்கலை முன்னிலையில் உள்ளது,'' என்றார்.