ஜெ., அறிவிப்புக்கு எதிராக தமிழக அரசு : அரசு ஊழியர் சங்கம் காட்டம்

மதுரை: 'பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புக்கு எதிராக தற்போதைய தமிழக அரசு செயல்படுகிறது' என, அரசு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம், இடைக்கால நிவாரணம் உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஏப்., 25
முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதில் பங்கேற்பது குறித்து ஆசிரியர்கள் ஏப்., 22ல் முடிவு செய்யவுள்ளனர். போராட்டத்தை கைவிட அரசு ஊழியர்களுடன் இவர்களுடன் அரசு பேச்சு நடத்த ஆர்வம் காட்டாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம், 1.4.2003 முதல் அமல்படுத்தப்பட்டது. இதில் 4.40 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர். அவர்கள் செலுத்திய 15 ஆயிரம் கோடி ரூபாய் ஓய்வூதிய கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது; ஆனால் அரசு, தன் பங்களிப்பை இதுவரை செலுத்தவில்லை. இறந்தவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை.இதற்கிடையே, 'பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்' என, சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, இதற்காக வல்லுனர் குழுவையும் அமைத்தார். அந்த குழு கடந்த மார்ச் 23ம் தேதியுடன் காலாவதியானது. ஜெயலலிதா அறிவிப்பை செயல்படுத்த, தற்போதைய அரசு ஆர்வம் காட்டவில்லை.
சம்பளக்குழு அறிவிக்கப்பட்டவுடன், இடைக்கால நிவாரணம் வழங்கப்படும். இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வலியுறுத்துகிறோம். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்குவது குறித்தும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து துறை தலைவர்கள், சம்பளக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் இல்லை.மூன்று லட்சம் பணியிடங்களை நிரப்ப அரசு ஆர்வம் காட்டவில்லை. ஏப்., 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவர். இதில் 61 துறைகளை சேர்ந்த 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.