வரி செலுத்துவோர் விபரங்கள் கசிவதை தடுக்க... புதிய சாப்ட்வேர் தயாரிப்பில் வரித்துறை தீவிரம்

புதுடில்லி: வருமான வரி செலுத்துவோரின் விபரங்கள், எவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டி ருந்தாலும், அதை, சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, களவாடப்படுவது, தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க, புதிய சாப்ட்வேர் ஒன்றை வருமான வரித்துறை உருவாக்கி வருகிறது.


வங்கியில் வாடிக்கையாளர் வைத்திருக்கும் கணக்கு தொடர்பான விபரங்களை பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதையும் மீறி, பலரது வங்கி கணக்கு களில் மோசடி நடப்பது தொடர்ந்து நடக்கிறது. மோசடி செய்தது யார் என, கண்டுபிடிக்க கூட முடிவதில்லை. தனி நபர்கள் என்றில்லாமல் இது போன்ற மோசடிகளால் வங்கிகளே பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளிலும் இந்த மோசடிகள் நடக்கின்றன.நமக்கு தெரியாம லேயே, நமது வங்கி கணக்கின், எண் உட்பட முக்கியமான விபரங்களை பெற்று, பணத்தை பரிமாற்றம் செய்கின்றனர். இதேபோல், வருமான வரி செலுத்துவோரின் விபரங்களும், ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், இந்த விபரங்களும், வங்கி கணக்கு விபரங்கள் களவாடப்படுவதுபோல், களவாடப் படுகின்றன. இதனால், வரி செலுத்துவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதை தடுக்க, புதிய சாப்ட்வேர் ஒன்றை, வருமான வரித்துறை உருவாக்கியுள்ளது. இதன்மூலம், வரி செலுத்துவோரின் விபரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், தகவல்கள் கசிவது தடுக்கப்படும். இந்த சாப்ட்வேர் பயன்பாட்டுக் கான வெள்ளோட்டம் நடந்து வருகிறது. இது, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டபின், இந்த சாப்ட்வேர் முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது:

வருமான வரி செலுத்துவோரின் விபரங்களை எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும்,
அதை மூன்றாவது நபர் அறிந்து கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
பெரும்பாலும் தவறான நபர்கள் தான், இதுபோன்ற முறை கேடுகளில் ஈடுபடுகின் றனர். இதனால், வருமான வரித் துறை செயல் பாட்டில், வரி செலுத்துவோருக்கு நம்பிக்கை குறைகிறது.

இதை தடுக்க, வருமான வரித்துறையின், 'டேட்டா'க் களை கையாளும் பிரிவை சீரமைக்க முடிவு செய் யப்பட்டது. நாட்டில் கோடிக்கணக் கான மக்கள், வருமான வரி செலுத்துகின்றனர். இவர்களின் விபரங்கள், தவறான நபர்களின் கைகளில் சென்று விடாமல் தடுக்கும் பொறுப்பு, வருமான வரித்துறைக்குஉள்ளது.

அதற்கான வழியை வருமான வரித்துறை ஆய்வு செய்து தான், புதிய சாப்ட்வேரை உருவாக்கி யுள்ளது. இது, இப்போது பரிசோதனை நிலையில் உள்ளது.இந்த சாப்ட்வேர் மூலம், வரி செலுத்து வோரின் விபரங்கள், யாரும் அறிய முடியாமல் பாதுகாக்கப்படும்.தானாக முன்வந்து வரி செலுத்துவோரின் விபரங்களையும் பாதுகாக்க முடியும்.

வரி செலுத்துவோர், இந்த சாப்ட்வேரை பயன் படுத்தி, தங்களுக்கான வரியை நியாயமாக, நேர்மையாக செலுத்த முடியும்.இதற்காக, ஐ.என்.டி. ஆர்.ஏ.சி., என்கிற வருமான வரி பரிமாற்ற ஆய்வு மையம் துவக்கப்படும். இந்த மையம், 'டேட்டா'க் களை கண்காணிப்பது, ஆய்வு செய்வது, டேட்டாக் களை பாதுகாப்பது உட்பட பல பணிகளை செய்யும்.

மேலும், வருமான வரி செலுத்தவும், பான் எண் பெறவும், ஆதார் எண் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. அதனால், வரி செலுத்துவோரின் விபரங்களை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. ஏனெனில், 'பான்' எண்ணுடன், ஆதார் எண்ணையும் இணைக்கும் போது, தகவல்கள் கசிந்துவிடும் என, பலரும் சந்தேகிக்கின்றனர். இதை தடுக்கவே, புதிய சாப்ட்வேரை வருமான வரித்துறை உருவாக்கியுள்ளது.

நாட்டில், 25 கோடி பேருக்கு மேல், 'பான்' கார்டு வைத்துள்ளனர். ஆனால், நான்கு கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். புதிய சாப்ட்வேர் பயன்பாட்டுக்கு வந்தபின், பான் மற்றும் ஆதார் எண்களை வைத்து, வரி செலுத்தாதவர்களை கண்டுபிடிப்பது எளிதாகிவிடும்.

மும்பை ஐகோர்ட் கடந்த,2015ல் பிறப்பித்த உத்தரவில், 'வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது பொதுப் பணி அல்ல. தனிப்பட்டவர்களின் செயல்; அதனால், அந்த தகவல்கள் வெளியே தெரியக் கூடாது' என, கூறியுள்ளது.
புதிய சாப்ட்வேர் இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக் குள், பயன்பாட்டுக்கு வரும் என, நம்புகிறோம். அதன்பின், வரி செலுத்துவோரின் விபரங்களை மூன்றாவது நபர் யாரும் களவாட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


வங்கிகளுக்கு பயன்:

வருமான வரித்துறை புதிய சாப்ட்வேர் உருவாக்குவது பற்றி தேசிய வங்கி ஒன்றின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி யால், எவ்வளவு நன்மை கிடைத்துள்ளதோ, அதே அளவு பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.வங்கி கணக்கு விபரங்களை, மூன்றாவது நபர் களவாடுவதால், வாடிக்கை யாளர் மட்டுமல்ல; வங்கிகளும் பாதிக்கப்படுகின்றன.

சமீபத்தில் கூட, சைபர் தாக்குதலால், 1,000 கோடி ரூபாய்க்கு மேல், மோசடி, நடக்க இருந்ததை, 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' சரியான நேரத்தில் கண்டுபிடித்தது. இதனால், பல கோடி ரூபாய் தப்பியது. இந்தியாவில் மட்டுமின்றி உலகில் பல வங்கிகளும், இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றன.
ரகசியங்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்பட்டால்தான், இதுபோன்ற சைபர் குற்றங்களை முற்றிலும் தடுக்கலாம். மக்களும், நிம்மதியாக இருக்கலாம். அதனால் வருமான வரித்துறையின் புதிய சாப்ட்வேர், வங்கிகளுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வரி செலுத்துவோருக்கு வரப்பிரசாதம்

இது பற்றி மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:வருமான வரித்துறை யின் சாப்ட்வேர், வரி செலுத்து வோருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் மூலம் பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

அப்படிப்பட்ட நிலையில், வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு விபரங்கள் கசிந்தால், அது மக்களை பெருமளவில் பாதிக்கும். அதனால், இந்த சாப்ட்வேர், எல்லாருக்கும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.