இ.பி.எப்., சந்தாதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் 'ஜாக்பாட்'

புதுடில்லி: இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் நன்னம்பிக்கை தொகை அளிக்க, அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல், அந்த நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளோருக்கு, பணி ஓய்வு பெறும் போது, முதிர்ச்சி
தொகையுடன் கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இது குறித்து, இ.பி.எப்.ஓ., வட்டாரங்கள் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு கால நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் செயல்படுகிறது. இதன்படி, ஊழியர்களின் சம்பளத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை, இ.பி.எப்., கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதில், பென்ஷன் தொகைக்கென தனியாக ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது. இந்த தொகைக்கு, ஆண்டு தோறும் குறிப்பிட்ட சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இ.பி.எப்., சந்தாதாரர்களின் நலன் கருதி, 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக நிதிய உறுப்பினராக உள்ளோருக்கு, நன்னம்பிக்கை தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை, 58 அல்லது 60 வயது நிறைவடைந்து பணி ஓய்வு பெறும் போதோ அல்லது விபத்து, உடல்நலக் குறைவால், உடல் உறுப்பு நிரந்தர செயலிழப்பின் போதோ வழங்கப்படும்.

இ.பி.எப்., அமைப்பின் வசம் உள்ள, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான, தொழிலாளர் வைப்பு தொகை காப்பீடு செய்யப்படும். இதன் மூலம், தொழிலாளர்களுக்கு நன்னம்பிக்கை தொகையாக, 30 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை கிடைக்கும்; 2.5 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீட்டு வசதியும் கிடைக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.