ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்? பேரவையில் அரசு தகவல்

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதி-மீன்வளத் துறை
அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார்.
  சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடந்த
விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெள்ளிக்கிழமை பேசியது: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கென நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு பரிந்துரைக்கும்போதுதான் நிதிச் சுமை எவ்வளவு எனத் தெரியும். அதன் அடிப்படையில் திருத்த மதிப்பீடுகளில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தக் கூடுதல் செலவுக்கான நிதி ஆதாரங்களும் அப்போது கண்டறியப்படும்.

உதய் திட்டம் இல்லாவிட்டால்….மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, அரசு கடன் ரூ.2.72 லட்சம் கோடியாக இருக்கும். ரூ.22,815 கோடி மின்சார வாரியத்தின் கடனை அரசு ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்டது. இல்லையென்றால், அரசின் கடன் மார்ச் 31 நிலவரப்படி ரூ.2.50 லட்சம் கோடியாகத்தான் இருந்திருக்கும். பொது நிறுவனங்களின் கடன் இந்த ஆண்டு இறுதியில் ரூ.94,000 கோடி அளவு மட்டுமே இருக்கும். அடுத்த நிதியாண்டு இறுதியில் அரசின் கடன் அளவு ரூ.3.14 லட்சம் கோடியாகும் என்றார் ஜெயக்குமார்