இன்று முடிகிறது ரூபெல்லா தடுப்பூசி முகாம்

தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி முகாம் இன்று முடிகிறது. விடுபட்ட குழந்தைகளை வீடு தேடிச் சென்று அழைத்து வந்து, தடுப்பூசி போட சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், ஒன்பது மாத குழந்தை முதல், 15 வயதுடையோர் வரையிலான, 1.76 கோடி
குழந்தைகளுக்கு, தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி, பிப்., 6ல், துவங்கியது. பிப்., 28 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. இலக்கை எட்ட முடியாததால், மார்ச், 15 வரை நீடிக்கப்பட்டது. இதன் அவசியம் குறித்து, குறும்படங்கள் மூலம், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுவரை, 1.40 கோடி குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடைசி நாளான இன்று, மீதமுள்ள, 36 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: தடுப்பூசியின் அவசியம் குறித்து, மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கடைசி நாளான இன்றைக்குள், 1.50 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும். மேலும், மருத்துவமனை, அங்கன்வாடி மையங்களில், ஒரு வாரம் தொடர்ந்து போடப்படும். விடுபட்ட குழந்தைகளை வீடு தேடிச் சென்று அழைத்து வந்து, தடுப்பசி போட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.