சமச்சீர் கல்வியைத் தொலைத்த பள்ளிக்கல்வித்துறை:ஒரு புதிய சர்ச்சை!

தமிழக அரசுப்பள்ளிகளில் சமச்சீர்க் கல்வி பாடத்திட்டம் மூலம் கணினி அறிவியல் பாடப் புத்தகங்கள் அச்சடிப்பது தொடர்பான
விவரங்கள் இல்லை என்று பள்ளிக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி, கணினி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின்  எதிர்காலம் இருட்டில் தள்ளப்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு பி.எட். கம்ப்யூட்டர் சயின்ஸ் வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குமரேசன் ,"கணினி அறிவியல் கல்வியை தமிழக அரசு தமது கட்டுப்பாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் கற்றுத்தருவதில் மிகுந்த மெத்தனமான நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் 39 ஆயிரத்து 19 கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கிறோம். சமச்சீர் கல்வி
நாங்கள் அனைவரும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள். கடந்த 1992-ம் ஆண்டு முதல் இப்போதுவரை அரசுப் பள்ளிகளில் வேலை கிடைக்கும் என்று காத்திருக்கிறோம். பலனில்லை. கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அது தொடங்கிய வேகத்திலேயே முடங்கிப்போனது. அதனையடுத்து நாங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினோம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் அனைவரிடமும் மனுக்கள் அளித்தோம்.பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடமும் 30க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அளித்துள்ளோம். நேரிலும் வலியுறுத்தினோம். அதோடு தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவிலும் நேரில் எங்கள் சங்கம் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் பல முறை மனுக்கள் அளித்துள்ளோம். ஆண்டுகள் பல கடந்தும் இன்னமும் எங்களுக்கு உரியதீர்வு அரசால் வழங்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் தவிக்கிறோம்
மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கியும் மாநில அரசு கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தாமல் காலம் கடத்தி வருகிறது. சமச்சீர் கல்வி திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 21 லட்சம் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 21 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் நிலையில் மாணவர்கள் அதன் மூலம் முழுமையான கல்வியைப் பெற இயலாத நிலையில் உள்ளனர். மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா என்கிறது. ஆனால் தமிழகத்தின் கணினி அறிவியல் பாடத்திட்டம் இருட்டில் உள்ளது." என்று கொந்தளித்தார்.
 சமச்சீர் கல்வி

மேலும் தொடர்ந்த குமரேசன்,"வேலையில்லா கணினி ஆசிரியர்களுக்கு எப்போதுதான் விடிவு கிடைக்கும் என்பது தெரியவில்லை. இந்த ஓராண்டில் கல்வித்துறைக்கு அமைச்சர்கள் மாற்றம் பல முறை நடந்துள்ளது. முதல்வர் மாற்றமும் 3 முறை நடந்துள்ளது. ஆறேழு ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சபீதாவும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் எங்களின் வாழ்க்கை மட்டும் இன்னமும் மாறவில்லை. எனவே இதன் விடை தேடும் முயற்சியாக, கடந்த ஜனவரி மாதம் எங்கள் தரப்பில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், பள்ளிக்கல்வி இயக்ககத்துக்குக் கேள்விகள் அனுப்பியிருந்தோம். அவற்றுக்குப் பதில் அனுப்பிய தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் 'சமச்சீர் கல்வித்திட்டத்தின்படி 6 முதல் 10-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சடிப்பது சார்பான விவரங்கள் இவ்வலுவலகத்தில் இல்லை' என்று பதிலளித்துள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.உடனடியாக இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் செயலாளரும் கவனம் செலுத்திட வேண்டும்" என்று தெரிவித்தார்.