பள்ளிகளில் பணியாற்றும் 2,999 துப்புரவுப் பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், சலுகைகளை வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் மனு

தமிழக பள்ளிகளில் பணியாற்றும் 2,999 துப்புரவு தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், அடிப்படை பணியாளர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்கத்த்தின் மாநிலத் தலைவர் எம்.அதிகமான் முத்து, பொதுச் செயலாளர் எஸ்.பி.சுந்தரராஜன் ஆகியோர் அமைச்சரிடம் வியாழக்கிழமை வழங்கினர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அரசுப்பணியாளர்கள் என்ற அங்கீகாரத்தின் மூலம், ஒரு சமூக அந்தஸ்தை அரசாணை 47-இன் மூலம் உருவாக்கி 2,999 துப்புரவு பணியாளர்கள், 2,001 இரவு க் காவலர்களை நியமித்தார்.
அந்த அரசாணையின்படி இரவுக் காவலருக்கு அடிப்படை சம்பளம் ரூ.4,800, தர ஊதியம் ரூ.1,300, அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி என மொத்தம் ரூ.14,612 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் துப்புரவு பணியாளருக்கு அடிப்படை சம்பளம் ரூ.1,300, அகவிலைப்படி ரூ.2,112 ஆகியவை உள்பட மொத்தம் ரூ.3,962 மட்டுமே வழங்கப்படுகிறது.


இன்றைய சூழலில் துப்புரவுப் பணியாளர்களுக்கான சம்பளம் அவர்களது குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாத நிலையில் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இரவு காவலர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய விகிதம் ரூ.4,800-10,000, தர ஊதியம் ரூ.1,300 என்ற கால முறை ஊதிய விகிதத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
மேலும் ஆண்டு ஊதிய உயர்வு, விடுப்புகள் போன்ற அடிப்படை பணியாளர்களுக்கான சலுகைகளையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.