மார்ச் 14 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அறிவிப்பு

மதுரை, இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 14 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளதால்,உள்ளாட்சி தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.


தமிழகத்தில், 12 ஆயிரத்து 524 ஊராட்சி செயலர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, இளநிலை உதவியாளருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். 


பத்தாண்டுகள் பணி முடித்த கணினி இயக்குனரை நிரந்தரப்படுத்தி, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

காலியான 124 உதவி இயக்குனர் பணியிடங்களை, நிரப்ப வேண்டும். 
ஆறாயிரம் காலியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற 
கோரிக்கைகளை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் கோரிக்கையை வலியுறுத்தி, மார்ச் 14ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.


மதுரையில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: மாநிலம் முழுவதும், 30 ஆயிரம் பேர், வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல்தயாரிப்பு பணி, தற்போது நடக்கிறது. வேலைநிறுத்தத்தால் இப்பணி பாதிக்கப்படும். தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறைகள், கிராமங்களில் குடிநீர் விநியோகிக்கும் பணி பாதிப்புக்குள்ளாகும். மார்ச் 15ல் மாவட்ட தலைநகரங்களில் பேரணி, 16,17ல் ஆர்ப்பாட்டங்கள், 20ல் மறியல், 21 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். எனவே அரசு 
உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என்றார்.