ஜி.எஸ்.டி., வரி: 10 முக்கிய அம்சங்கள்

புதுடில்லி: ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள பொருட்கள் மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., குறித்த விவாதத்தை, லோக்சபாவில், இன்று காலை (மார்ச் 29) மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி துவக்கி வைத்தார். ஜி.எஸ்.டி.,யின் நான்கு மசோதாக்கள் குறித்து, ஏழு மணி நேரத்திற்கு மேல் எம்.பி.,க்கள் விவாதம் செய்ய உள்ளனர்.


அமைச்சரவை ஒப்புதல்

இந்த சூழ்நிலையில், ஜி.எஸ்.டி., குறித்த, 10 அம்சங்கள் வருமாறு:
1. மார்ச், 20ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. அதில், மத்திய ஜி.எஸ்.டி., மசோதா, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மசோதா, யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி., மசோதா, இழப்பீடு மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்தனர்.
2. ஜி.எஸ்.டி.,யில் அதிகபட்சம், 40 சதவீதம் வரை வரி விதிக்க முடியும். அதே நேரத்தில், கொள்ளை லாபத்தை தடுக்கும், கூடுதல் லாப தடுப்பு ஆணையத்தையும், நுகர்வோர் நல நிதி அமைப்பையும் ஏற்படுத்த வழி வகை செய்யும்.
3. மத்திய ஜி.எஸ்.டி., மசோதா: அனைத்து
மறைமுக மத்திய அரசு வரிகளான, விற்பனை வரி, சேவை வரி, கலால் வரை, கூடுதல் சுங்க வரி( பொருட்கள் குவிப்பு தடுப்பு வரி) சிறப்பு கூடுதல் சுங்க வரி, ஆகியவற்றை இது ஒருகிணைத்துவிடும். இதில், அதிகபட்சம், 20 சதவீத வரி மட்டுமே விதிக்க முடியும்.
4. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மசோதா: மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் விற்பனை, சேவை பரிமாற்றம் போன்றவற்றின் மீது, இதன் மூலம் மத்திய அரசு வரிவசூலிக்கப்படும். இதன் மூலம், அதிகபட்சம், 40 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி தொகையை, மத்திய மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும்.
5. யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி., மசோதா: இது, சண்டிகார், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ போன்ற யூனியன் பிரதேசங்களின் ஜி.எஸ்.டி., வரியை கவனித்து கொள்ள, இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.
6. இழப்பீடு மசோதா: இது, ஜி.எஸ்.டி.,( மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது) மசோதா என்று அழைக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்திய பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய, இந்த மசோதா வழி வகை செய்யும்.
ஜி.எஸ்.டி., கவுன்சில்

7. ஜி.எஸ்.டி., குறித்து முடிவு செய்ய, ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய நிதி அமைச்சர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள், 12 முறை கூட்டங்களை நடத்தி, மேற்கூறிய நான்கு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த கவுன்சில் வரும்,31ம் தேதி மீண்டும் கூடி, புதிய வரி நடைமுறைக்கான விதிகள் மற்றும் நடைமுறைகளை இறுதி செய்வார்கள்.
8. ஜி.எஸ்.டி., கவுன்சில், ஏற்கனவே, 5, 12, 18, 28 என நான்கு கட்டங்களாக, ஜி.எஸ்.டி., வரி
வசூலிக்கப்படும் என இறுதி செய்துள்ளது. இது தவிர, சொகுசு கார்கள், குளிர்பானங்கள், புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கவும் இந்த கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
9. நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரிலேயே ஜி.எஸ்.டி., சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று விட வேண்டும் என்பதில் மத்திய அரசு மிக கவனமாக இருக்கிறது. ஏனெனில், செப்., 15க்கு பிறகு மத்திய, மாநில அரசுகள், மறைமுக வரிகளை வசூலிக்கும் உரிமையை இழக்க நேரிடும் என, மத்திய அரசு அதற்கு காரணமாக கூறி வருகிறது. ஜி.எஸ்.டி.,க்கான அரசியல் சட்ட திருத்த மசோதாக்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு செப்., 16ம் தேதி வெளியானது. புதிய மறைமுக வரி வசூலுக்கு மாற ஒரு ஆண்டு கால அளவை நிர்ணயித்து அந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதை தான் தற்போது மத்திய அரசு சுட்டிக் காட்டுகிறது.
10. ஜி.எஸ்.டி., வரிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தாலும், லோக்சபாவில் இன்று விவாதத்தில் பங்கேற்கும் போது, சில திருத்தங்களை வலியுறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.