TNTET:15 லட்சம் விண்ணப்பங்கள் வீண்-DINAMALAR

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' நுழைவுத் தேர்வுக்கு, 15 லட்சம் விண்ணப்பங்கள், தவறாக அச்சிடப்பட்டு, குப்பைக்கு சென்றுள்ளன. அதனால், பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
'டெட்' தேர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு, இரு மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, மூன்றாண்டுகளுக்கு பின், 'டெட்' தேர்வை மீண்டும் நடத்த, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசு 
உத்தரவிட்டது.



டெட் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த, பிப்., முதல்வாரத்தில், சென்னைக்கு வருமாறு, சி.இ.ஓ.,க்களான மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, டி.ஆர்.பி., தலைவராக இருந்த விபுநய்யர் உத்தரவிட்டார். 

ஆனால், பள்ளிகளில் செய்முறைத் தேர்வு நேரமாக இருந்ததால், சி.இ.ஓ.,க்கள் வர, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்தது.இந்நிலையில், டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யர், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனமான, 'டான்சி'க்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவை கழக மேலாண் இயக்குனர் காகர்லா உஷாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.


விபு நய்யர் இருந்த போது, 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிட்டு, அவற்றில் முதல் கட்டமாக, 50 சதவீத விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன. 


அவற்றை, காகர்லா உஷா மற்றும் அதிகாரி கள் ஆய்வு செய்ததில், விண்ணப் பங்களில் இடம்பெற வேண்டிய, டி.ஆர்.பி., விதிகள் மற்றும் சில முக்கிய அம்சங்கள் இல்லாதது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்ட, டெட் விண்ணப்பங்கள், ஈரோட்டில் உள்ள, அரசு காகித அச்சகத்திற்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும், புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. 
இந்த குளறுபடியால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.