ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் சம்பளம்... மாற்றம் மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் ஒப்புதல்

புதுடில்லி,: ஊழியர்களுக்கு காசோலை அல்லது வங்கிக் கணக்கில், சம்பளம் வழங்குவதை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துவிட்டார். இதையடுத்து, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம், 'வாபஸ்' பெறப்பட்டது.
பிரதமர் மோடி, 2016 நவ., 8ல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார். 'கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், பயங்கரவாதிகள்,
தீவிரவாதிகளிடம் பணப்புழக்கத்தை குறைக்கவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என, அவர் தெரிவித்தார்.
மேலும், 'ரொக்க பரிமாற்றத்தை விட, மின்னணு முறை பரிமாற்றத்திற்கு, மக்கள் மாற வேண்டும்' என, பிரதமர் வலியுறுத்தினார். அதை தொடர்ந்து, மின்னணு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், பல திட்டங்களையும், மத்திய அரசு
அறிவித்தது.
இதற்கிடையில், 'நாட்டில், சிறு, குறு நிறுவனங்கள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை, ஊழியர்களுக்கு காசோலை மூலமாகவோ அல்லது ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியோ, சம்பளம் வழங்க வேண்டும்; ரொக்கமாக வழங்கக் கூடாது' என, மத்திய அரசு அறிவித்தது. இதை அமல்படுத்தும் வகையில், கடந்தாண்டு, டிச., 28ல், அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இந்த அவசர சட்டத்தை, நிரந்தர சட்டமாக்கும் வகையில், சம்பளம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர,
மத்திய அரசு முடிவு செய்தது.
முந்தைய சட்டத்தில், சம்பளத்தை, ரூபாய் நோட்டுகளாகவோ அல்லது நாணயமாகவோ, இரண்டும் கலந்தோ வழங்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.
இந்த சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவில், 'சம்பளத்தை, காசோலையாகவோ அல்லது வங்கிக் கணக்கில் செலுத்துவது மூலமாகவோ வழங்க வேண்டும்' என, திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்தது.

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர், ஜன., 31ல் துவங்கியது. சம்பள சட்டத்திருத்த மசோதா, லோக்சபாவில், பிப்., 7ல் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மறுநாள், ராஜ்யசபாவில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட, சம்பள சட்டத்திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, தொழிற்சாலைகள், நிறுவனங்களிடம், ஊழியர்களுக்கான சம்பளத்தை காசோலையாகவோ அல்லது வங்கிக் கணக்கிலோ செலுத்த வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட முடியும்.
இதையடுத்து, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டமும், 'வாபஸ்' பெறப்பட்டு உள்ளது.

மோசடி குறையும்

இந்த சட்டம் குறித்து, நிதித் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில், பல நிறுவனங்கள், ஊழியர்களின் வங்கிக் கணக்கில் தான், சம்பளத்தை வழங்கி வருகின்றன. இந்த சட்டத்தின் மூலம், மோசடிகள் தடுக்கப்படும். ஊழியர்களுக்கு சம்பளமாக, கறுப்புப் பணம் வழங்கப்படுவதை, முற்றிலும் தடுக்க முடியம்; வருமான வரி மோசடியையும் தடுக்க முடியும். நிறுவனங்களின் உரிமையாளர்களும், ஊழியர்களும், வருமான வரியை முறையாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன், ரொக்க பரிமாற்றம் குறைந்து, மின்னணு பரிமாற்றத்திற்கு, மக்கள் அதிகளவில் மாறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

பி.எப்., பணம்

மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல சிறு நிறுவனங்கள், ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்குகின்றன. இதனால், ஊழியர்களின்
சம்பளத்தில், மோசடி செய்யப்படுகிறது. அத்துடன், பல நிறுவனங்கள், ஊழியர்களை, பி.எப்., கணக்கில் சேர்க்காமல், மோசடி செய்கின்றன. பி.எப்.,க்கு கட்ட வேண்டிய பணத்தையும் முறையாக கட்டுவதில்லை. காசோலைகள் அல்லது வங்கிக் கணக்கில் சம்பளத்தை செலுத்துவதை கட்டாயமாக்கினால், இந்த மோசடிகளை தடுக்கலாம்.
சூப்பர் மார்கெட் போன்ற சில்லரை வர்த்தக நிறுவனங்களிலும், இந்த முறையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.