ரூ 2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் 1% கூடுதல் வரி கட்ட வேண்டும்!

ரூ.2 லட்சத்துக்கும் மேல் நகை வாங்கினால் கூடுதலாக 1 சதவீத மூல வரி (டிசிஎஸ்) விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரும். இதுவரை ரூ.5 லட்சத்துக்கும் மேல் பொருள்களை வாங்கும்போது மட்டுமே 1 சதவீத மூல வரி விதிக்கபட்டது. எனினும், இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.3 லட்சத்துக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்வது தடை செய்யப்பட்டதால், அந்த ரூ.5 லட்ச உச்சவரம்பை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்குப் பதிலாக, ரூ.2 லட்சத்துக்கும் மேல் வாங்கினால் 1 சதவீத மூல வரியை ஈர்க்கும் பொருள்களின் பட்டியலில் தங்க நகைகளையும் சேர்க்க வரைவு நிதி மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வருமான வரி சட்டத்தின்படி, ரூ.2 லட்சத்துக்கும் மேல் கொடுத்து பொருள்களையோ, சேவைகளையோ பெறுபவர்களிடமிருந்து 1 சதவீத மூல வரி விதிக்க வேண்டும். தற்போது, அந்தப் பொருட்களின் பட்டியலில் தங்க நகைகளும் இடம்பெறவிப்பதால், அவற்றையும் ரூ.2 லட்சத்துக்கு மேல் வாங்கினால் 1 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.