ஜிஎஸ்டி வரி ஜூலை 1 முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

புதுதில்லி: நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி சட்டம் (ஜிஎஸ்டி) வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை உறுதி செய்வதற்காக ஜிஎஸ்டி மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் அந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து நடந்து வந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரூ.1.5 கோடிக்கும் குறைவாக விற்றுமுதல் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி மதிப்பீடு மற்றும் வசூல் நடவடிக்கைகளில் 90 சதவீதத்தை மாநில அரசுகள் மேற்கொள்வதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதேபோன்று ரூ.1.5 கோடிக்கு அதிகமாக விற்றுமுதல் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி மதிப்பீடு, வசூலிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் சரிபாதியாக பிரித்துச் செயல்படுத்தவும் இசைவு தெரிவிக்கப்பட்டது. இதைத் தவிர, கடல் வழியாக 12 மைல் தொலைவுக்குள் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்கான வரி மதிப்பீடு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட கடலோர மாநிலமே மேற்கொள்வதற்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்ததால், ஜிஎஸ்டி விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜிஎஸ்டி மசோதாவை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி சட்டம் (ஜிஎஸ்டி) வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.