உலக சாதனையாக 104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட் 15–ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது

சென்னை,

 ராக்கெட்டுகள் 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்த ராக்கெட்டுகள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

கடந்த 1994–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை இஸ்ரோ பல்வேறு ராக்கெட்டுகள் மூலம் 121 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. இதில் 21 நாடுகளைச் சேர்ந்த 51 நிறுவனங்களுக்கு சொந்தமான 79 வெளிநாட்டு செயற்கைகோள்களும், உள்நாட்டைச் சேர்ந்த 42 செயற்கைகோள்களும் அடங்கும்.

நானோ வகை செயற்கைகோள்கள் 

இதனை தொடர்ந்து தற்போது 104 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 664 கிலோ எடை கொண்ட 103 செயற்கைகோள்களுடன், 714 கிலோ எடை கொண்ட நம் நாட்டுக்கு சொந்தமான கார்ட்டோ சாட்–2 என்ற வானிலை ஆய்வுக்கான செயற்கைகோள்களும் செலுத்தப்படுகிறது.

இதில் அமெரிக்காவுக்கு சொந்தமான 96 நானோ வகை செயற்கைகோள்களும் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள செயற்கைகோள்கள் ஆய்வு செய்யப்பட்டு ராக்கெட்டுகளில் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 இதுகுறித்து விக்கிரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சிவன் கூறியதாவது:–

இஸ்ரோவின் உலக சாதனை 

இஸ்ரோவை பொறுத்தவரையில் விண்ணில் செலுத்தப்படும் ஒவ்வொரு ராக்கெட்டும் மிகவும் முக்கியமானவையாகும். அந்தவகையில் பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட், வரும் 15–ந்தேதி (புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு 104 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள் பெரும்பாலும் ‘நானோ’ வகை செயற்கைகோள்களாகும்.

அனைத்து செயற்கைகோள்களையும் ஒரே சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் சவாலை சந்திக்க வேண்டி உள்ளது. இதற்கு பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல் வகை ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. ராக்கெட்டின் என்ஜினை நிறுத்திவிட்டு, மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் இருக்காது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இருப்பது முதன் முறையாகும். இந்த சாதனையை வெற்றிகரமாக கடந்தால் உலக சாதனையை படைத்த பெருமையை இஸ்ரோ பெரும்.

இவ்வாறு அவர் கூறினார்.