ஆசிரியர், மாணவிக்கு மிரட்டல் : கல்வி அதிகாரி மீது வழக்கு-DINAMALAR

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 2015--16ம் கல்வி ஆண்டில் படிப்பை முடித்தார். இந்நிலையில் ஆக., 17ல், பள்ளி இரவு காவலர் மங்களேஸ்வரி, சித்ராவை ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு ஆட்டோவில் அழைத்து வந்தார். அங்கு ஏதோ எழுதிய தாளில் கையெழுத்து வாங்கினர். பிறகு படித்து பார்த்தபோது அப்பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் சித்ராவை பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதியிருந்தது. 


அந்த தாளை சித்ரா கிழித்து போட்டார். நாங்கள் சொல்வது போல் எழுதி கொடு. உனக்கு ஒன்றும் ஆகாது என மிரட்டியுள்ளனர். தலைமை ஆசிரியை பிரேமாவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து ஒரு தாளில் அவர்கள் எழுதிய வாசகங்களை சித்ராவிடம் எழுதி கையெழுத்து வாங்கி கொண்டு அவரை ஊரில் இறக்கி விட்டனர்.இது தொடர்பாக ஆக., 27ல் கலெக்டரிடம் சித்ரா புகார் கொடுத்தார். நடவடிக்கை எடுக்காததால் சித்ரா சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து தலைமை ஆசிரியை பிரேமா, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, இரவு காவலர் மங்களேஸ்வரி ஆகியோர் மீது திருப்புல்லாணி எஸ்.ஐ., கருப்பசாமி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.-----------இப்பிரச்னை குறித்து விளக்கம் கேட்க ஆசிரியர் முகேந்திரன் அக்., 18ல் முதன்மை கல்வி அலுவலகம் சென்றார். அங்கு தன்னை தலைமை ஆசிரியை, முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் மிரட்டல் விடுத்ததாக ராமநாதபுரம் பஜார் போலீசில் முகேந்திரன் புகார் கொடுத்தார். உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு கொடுத்தார். நீதிமன்ற உத்தரவுப்படி தலைமை ஆசிரியை பிரேமா, கணவர் நாகராஜன், முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, பள்ளி துணை ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிந்தார்.