நாளை முதல் மழை குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்வதால் தமிழகத்தில் நாளை முதல் மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நேற்று மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று குமரி கடற்பகுதியில் நிலவுகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து மேற்கு திசையில் நகர்வதால் நாளை அதாவது ஜனவரி 29 முதல் தமிழகத்தில் மழை வெகுவாகக் குறையும்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பம்பான் பகுதியில் 13 செ.மீ. மழையும், ராமேஸ்வரத்தில் 11 செ. மீ.  மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்த வரை இன்று அவ்வப்போது லேசான மழை பெய்யக் கூடும்.