நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்: தமிழக அரசு தகவல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் "நீட்' தகுதித் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களை காக்க 2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பாக "நீட்' தேசிய தகுதித் தேர்வை எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர கண்டிப்பாக "நீட்' தேர்வை எழுத வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீட் தேர்வு நடத்தப்பட்டால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது.
இதனால் தமிழக மாணவர்களை காக்கும் வகையில் இரு சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது. எனவே, நீட் தகுதித் தேர்வின்றி, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக இச்சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
நீட் தகுதித் தேர்வை திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பதால், இச்சட்டங்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு இச்சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. நீட் தகுதித் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற பேரவை கூட்டத் தொடர் ஓரிரு நாள் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி எய்ம்ஸ், சண்டீகர் பிக்மர், புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகள் தனி சட்டத்தால் உருவாக்கப்பட்டவை. இதனால், அவற்றுக்கு "நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் "நீட்' தகுதித் தேர்வில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ஜிப்மரில் சேர விரும்புவோர் தனியாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது