தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும்

சென்னை,

குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலைகொண்டிருப்பதால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை 

தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 26–ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுஉள்ளது.

இதனால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்களில் ஒருவரான பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

தென் தமிழகத்தில் மழை பெய்யும் 

நேற்று (நேற்று முன்தினம்) மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அங்கிருந்து நகர்ந்து குமரிக்கடல் பகுதியில் தற்போது நிலைகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

மேலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு திசை நோக்கி நகருவதால் நாளை (இன்று) முதல் மழை அளவு வெகுவாக குறைந்துவிடும்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இருந்து தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மழை அளவு 

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–

பாம்பன் 13 செ.மீ., ராமேசுவரம் 11 செ.மீ., காஞ்சீபுரம் 10 செ.மீ., குன்னூர் 8 செ.மீ., காவேரிப்பாக்கம், விருதாச்சலம், ஜெயம்கொண்டம், செந்துறை ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., ஆரணி, கடலூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, தேவக்கோட்டை, திருக்கோவிலூர், ஆர்.கே.பேட்டை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., சேத்தியாத்தோப்பு, ராமநாதபுரம், வானூர், போளூர், நெய்வேலி, திண்டிவனம், ஊட்டி, வேலூர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.