'பிள்ளைகளை டாக்டராக்கும் லட்சியத்திற்கு படிக்கல்'

'நீட்' தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு நிகராக, ஏராளமான பெற்றோரும் பங்கேற்றனர். தங்கள் பிள்ளைகளை எப்படியும், டாக்டராக்கி விட வேண்டும் என்ற லட்சியத்தில், பெற்றோர் பலர், நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களுக்கு, சந்தேகங்களை தீர்க்கும் வகையில், தனியாக கேள்வி - பதில் நேரம் வழங்கப்பட்டது. தேர்வுக்கு எந்த
தேதியில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு அறையில் எப்படி நடந்து கொள்வது என்பன உள்ளிட்ட தகவல்கள், நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. எம்.பி.பி.எஸ்.,க்கு பின், என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டுதலும், பயனுள்ளதாக அமைந்தது.பி.மேனகா, மீனாட்சி மருத்துவ கல்லுாரி, காஞ்சிபுரம்.
விண்ணப்பத்தை எப்படி நிரப்ப வேண்டும் என்பது முதல், மாணவர்கள் சேர்க்கை வரையில், அனைத்து தகவல்களும் கிடைத்தன. பெற்றோருக்கான, கேள்வி - பதில் நேரத்தில், 'நீட்' குறித்த பல குழப்பங்களுக்கு விளக்கம் கிடைத்தது. பிள்ளைகளை டாக்டராக்கும் லட்சியம், இந்த நிகழ்ச்சி மூலம் நிச்சயம் நிறைவேறும்.டி.யுவராஜ், போரூர், சென்னை
நீட் நுழைவு தேர்வு குறித்த பாடத்திட்டம், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் அடங்கிய, தொகுப்பு புத்தகம், 'தினமலர்' சார்பில் வழங்கப்பட்டது. இதன் மூலம், தேர்வில் இடம்பெற உள்ள வினாக்களின் முறையை தெரிந்து கொள்ள முடிகிறது. எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, இந்த நிகழ்ச்சி படிக்கல்லாகும் என்பதில் மாற்றமில்லை.கே.கோவிந்தராஜ், தனியார் நிறுவன ஊழியர், முகப்பேர்
நீட் தேர்வின் விண்ணப்ப பதிவு மற்றும் மாணவர்கள் தயார் நிலையில் உள்ள ஆவணங்கள், சான்றிதழ் குறித்த தகவல்கள், பயனுள்ளதாக இருந்தன. கே.இந்திராதேவிசமூக சேவகர், சேத்துப்பட்டு
நிகழ்ச்சிக்கு வரும் முன், 'நீட்' நுழைவு தேர்வு குறித்து, நிறைய சந்தேகங்கள் இருந்தன. இதில், பங்கேற்ற பின் அச்சம் நீங்கியது. 'நீட்' தேர்வில் வெற்றி பெற, பிளஸ் 1, பிளஸ் 2 பாட புத்தகங்களை படிப்பதுடன், பயிற்சி வகுப்புக்கும் சென்றால், எளிதில் வெற்றி பெறலாம் என, அறிந்தோம்.பி.கற்பகவள்ளி, இல்லத்தரசி, பொன்னேரி.
நீட் தேர்வு தொடர்பாக, பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. இதுகுறித்து, இணையதளங்களில் பல தகவல்களை பெற்றாலும், அவை போதுமானதாக இல்லை. இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்தன. 'நீட்' தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற, இந்த நிகழ்ச்சி உதவும்.எஸ். பாண்டியன்,பொன்னேரி.- நமது நிருபர் -