மொபிகேஷ் எம்-வாலட்: பணப் பரிமாற்றத்துக்கான புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகம்

செல்லிடப்பேசி வழியில் பணம் பரிமாற்றம் செய்வதற்கு மொபிகேஷ் எம்-வாலட் என்ற புதிய வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


 இதுகுறித்து பிஎஸ்என்எல் பொதுமேலாளர் எஸ்.இ.ராஜம் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

மொபிகேஷ் எம்-வாலட் எனப்படும் நவீன வசதியை செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலமாக வங்கிக் கணக்கு இல்லாமலேயே செல்லிடப்பேசி மூலமாக பணப் பரிமாற்றங்களைச் செய்யலாம். பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து இந்த சேவை வழங்கப்படும்.

 செல்லிடப்பேசியில் எஸ்பிஐமொபிகேஷ் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இவ்வசதியைப் பெறலாம். ஸ்மார்ட்போன் இல்லாத வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி மூலமாக எம்-வாலட் வசதியைப் பயன்படுத்தலாம்.

எம்-வாலட் பயனாளர்கள் தங்கள் அருகே உள்ள பிஎஸ்என்எல் விற்பனையாளர்களிடம் விரும்பும் தொகையச் செலுத்தி, அத் தொகையை எம்-வாலட்டில் வைப்புத் தொகையாக்கிக் கொள்ளலாம். நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்ய முடியும்.

அதன்பிறகு அத்தொகையில் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் செல்லிடப்பேசிகளுக்கு ரீசார்ஜ் செய்வது, தரைவழி மற்றும் போஸ்ட்பெய்ட் செல்லிடப்பேசிக்கு மாதாந்திரக் கட்டணம் செலுத்துவது, வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம், வேறொரு நபரின் எம்-வாலட்டிற்கு பணப் பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். எம்-வாலட் மூலமாக பெறப்படும் சேவைக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

எம்-வாலட் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயனாளராகத் தொடர செல்லிடப்பேசி எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை மட்டும் பதிவு செய்தால் போதுமானது. வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

தொலைதூர கிராமங்களுக்கும் வங்கிச் சேவையைக் கொண்டு செல்லும் வகையில் இந்த வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.

 இந்த செல்லிடப்பேசி எம்-வாலட் மூலமாக குடிநீர்க் கட்டணம், மின்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும். இதுதொடர்பான எம்-வாலட் சேவை தொடர்பான விவரங்களுக்கு 94861-00644, 94861-03100 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.