தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்க... திட்டம் ஆதாயத்துடன் செயல்படும் அதிகாரிகளை மாற்ற முடிவு

தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்கும் வகையில், உயர் அதிகாரிகளை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது; இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வி செயலக கட்டுப்பாட்டில், பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, தேர்வுத் துறை, மெட்ரிக் இயக்குனர் போன்ற, பல துறைகள் உள்ளன. இவற்றுக்கு, தனி இயக்குனர்கள் உள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் அனுபவம் மிக்கவர்கள் என்றாலும், செயலகத்தில் உள்ள அதிகாரிகள், அவர்களைச் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என, புகார்கள் உள்ளன. பணி நியமனம், பணியிட மாற்றம், நிதி ஒதுக்குதல் போன்றவற்றில், செயலக அதிகாரிகளின் தலையீடு இல்லாமல், எந்த கோப்பும் நகர்வதில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இயக்குனரகத்துக்கு தெரியாமல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை, செயலக அதிகாரிகளே நேரடியாக தொடர்பு கொண்டு, பரிந்துரைகள் செய்கின்றனர். இதனால், நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுவதாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் தலைமையில் உள்ள அரசு நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இயக்குனர்களுக்கு நெருக்கடி கொடுத்து, ஆதாயத்துடன் செயல்படும், உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பள்ளிக்கல்வியை, மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு நிகராக கொண்டு வர, மறைந்த முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அதற்கேற்ப, துறையில் மாற்றம் கொண்டு வரவும், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் பதவியேற்றபோது, அவருக்கு ஆலோசனைகள் வழங்கினார். 
ஆனால், தற்போதைய உயர் அதிகாரிகள், பாடத்திட்டத்தை கூட மாற்ற, தயக்கம் காட்டுகின்றனர். மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன் தயாரித்த பாடத்திட்டத்தை மாற்றவும், புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கவும், குழு அமைக்கவில்லை.மத்திய அரசும், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களும், மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்துகிறது. ஆனால், தமிழக மாணவர்கள், இந்த நுழைவு தேர்வுக்கு தகுதி பெற முடியாததால், வெளிமாநில மாணவர்களுக்கு, அதிக வாய்ப்புகள் 
கிடைக்கின்றன.இதுபோன்ற பல்வேறு விஷயங்களை மையப்படுத்தி, கல்வித் துறையை சீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வி செயலகத்தில் மாற்றம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல், தலைமை செயலரின் நேரடி பரிசீலனைக்கு பின் வெளியிடப்படும்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.