குடியரசு தினம் : தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு 3வது பரிசு

tamilnadu

புது தில்லி: புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு 3வது பரிசு கிடைத்துள்ளது.

தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பாக அதே சமயம் மக்களை அதிகம் கவரும் மாநிலத்தின் அலங்கார ஊர்திகளுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட 13 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளில் அருணாச்சல பிரதேசத்தின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
திரிபுரா மாநில அலங்கார ஊர்திக்கு 2வது பரிசு கிடைத்துள்ளது. 3வது பரிசை தமிழகமும் மகாராஷ்டிரமும் பகிர்ந்து கொண்டுள்ளன.
கரகாட்டத்தை மையமாக வைத்து தமிழக அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  தமிழக அலங்கார ஊர்தியில் கரகாட்டக் கலைஞர்கள் நடனமாடியபடியும், நாதஸ்வர கலைஞர்கள் இசைக் கருவியை இசைத்தபடியும் சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது