ஆதார் எண்ணை இணைக்க பி.எஃப். ஓய்வூதியதாரர்களுக்கு பிப். 28 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து வாழ்வுச் சான்றிதழ் பெறுவதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 28-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

எனவே பிப்ரவரி மாதம் வரை ஓய்வூதியம் பெறுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்றும் அதற்குள் ஆதார் எண்ணை ஓய்வூதியதாரர்கள் இணைத்து வாழ்வுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் இணைத்து வாழ்வுச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். ஆதார் சட்டம் 2016-இன் கீழ் பிரிவு 7-இன்படி, இதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
இபிஎஸ் 1995-இன் கீழ் மானியங்களைப் பெறுவதற்கும் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முகப்பேரில் வசதி: சென்னை முகப்பேரில் உள்ள பி.எஃப். மண்டல அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044- 26350080, 26350110, 26350120 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று பி.எஃப். மண்டல ஆணையர் வி.எஸ்.எஸ்.கேசவராவ் தெரிவித்துள்ளார்.