பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு IIT, தேர்வில் முக்கியத்துவம்

'இந்திய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., உட்பட, உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதில், ஐ.ஐ.டி.,க்கு மட்டும், இரண்டு கட்ட நுழைவு தேர்விலும், மற்ற நிறுவனங்களுக்கு, முதற்கட்ட நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.



வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவு தேர்வு, ஏப்ரலில் நடக்கிறது. இதில், தேர்ச்சி பெறுவோர், சென்னை, ஐ.ஐ.டி.,யால் நடத்தப்படும், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவு தேர்வு எழுத தகுதி பெறுவர். அதிலும், தேர்ச்சி பெறுவோர், தரவரிசை பட்டியல்படி, ஆன்லைன் கவுன்சிலிங் மூலம், ஐ.ஐ.டி.,க்களில், இன்ஜினியரிங் சேரலாம்.


இதுவரை, ஜே.இ.இ., தேர்வு எழுதும், பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, ஜே.இ.இ., மதிப்பெண், 60 சதவீதமும், பிளஸ் 2 மதிப்பெண்ணில், 
40 சதவீதமும் சேர்த்து, தரவரிசை பட்டியல் தயார் செய்யப்படும்.இந்த ஆண்டு முதல், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அந்த மாணவர்கள், தங்களது பிளஸ் 2 அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்வில், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய திட்டத்திற்கு, மத்திய மனிதவள அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. எனவே, பிளஸ் 2 தேர்வில், அனைத்து மாணவர்களும், அதிக மதிப்பெண் பெறுவது அவசியமாகி உள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.