பிப்., 1ல் மத்திய பட்ஜெட்:தொழில் துறையினர் ஆவல்

கோவை: மத்திய பட்ஜெட், தொழில் துறையினர் மத்தியில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்., 1ல், தாக்கல் செய்யப்படுகிறது. பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினர் மத்தியில், இந்த பட்ஜெட், எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:இந்திய பொருளாதார வளர்ச்சியில், தொழில் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் துறையினருக்கு உதவ, வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவும் வேண்டும். நடப்பு மூலதன கடனுதவி, 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
ஜவுளித் தொழிலில், ஜி.எஸ்.டி., திட்டம் அமல்படுத்தும் வரை, விருப்ப வரி திட்டத்தை தொடர வேண்டும். செயற்கை பஞ்சுக்கு, இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். பஞ்சு வரத்து அதிகம் உள்ள, டிச., முதல் மார்ச் மாதங்களில், உள்நாட்டு தொழில் துறையினர் அதிகளவு பஞ்சு வாங்க, கடனுதவி திட்டங்களை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்