ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கான ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் அளிப்பதை தடை செய்யும் அவசர சட்ட திருத்த மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக கொண்டு வரப்பட்டது.
ஊழியர்களுக்கான ஊதியத்தை ரொக்கமாகக் கொடுக்காமல், ஆன்லைன் மற்றும் காசோலை மூலம் வழங்க அவசரச் சட்டம் வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
ஊதியம் வழங்கல் சட்டம் 1936-இல் திருத்தம் மேற்கொள்வதற்காக மத்திய அரசு விரைவில் அவசர சட்டம் கொண்டுவர இருக்கிறது.
இதன்படி தொழில், வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கான ஊதியத்தை மின்னணு முறையில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தவும், காசோலை மூலம் வழங்கவும் வேண்டும்.
இது தொடர்பான ஊதியம் வழங்கல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 15-ஆம் தேதி அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இந்த மசோதாவை தாக்கல் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தால், 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் தாரளமாகக் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஊதியத்தை ரொக்கமாக அளிக்காமல், வங்கிக் கணக்கில் செலுத்தவும், காசோலையாக வழங்கவும் அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.