பழைய நோட்டுக்களை வங்கி , தபால் அலுவலகங்களில் மாற்றிக்கொள்ள இன்று கடைசி நாள்

 செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் மாற்றிக்கொள்ள இன்று கடைசி
நாளாகும். நவம்பர் 8ஆம் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பணத்தை ஒழிக்க பணம் மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டார். தீவிரவாதிகளிடம் உள்ள கள்ளநோட்டு மற்றும் எல்லைதாண்டி வரும் போலி ரூபாய் நோட்டுக்களை முடக்கவே இந்த நடவடிக்கை என அவர் தெரிவித்தார். 500 மற்றும் 1000 ரூபாய் திரும்ப பெறப்படும் நிலையில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக வெளியிடப்படும் என மோடி கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த வசதி படைத்தவர்கள் கணக்கில் காட்டாமல் வைத்திருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை நவம்பர் 8ம் தேதி இரவே தங்கத்தில் முதலீடு செய்தனர்
மேலும் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வதில் தினமும் புதிய அறிவிப்புக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. வங்கிகளில் பணம் எடுக்க சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதன்படி வாரம் ரூ.24,000 மட்டுமே எடுக்க வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் புதிய ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் வங்கிகளில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. டிசம்பர்  30ம் தேதிக்கு பிறகு ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் 31ம் தேதி வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அனுமதி உண்டு. இதனிடையே மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழைய நோட்டுக்களை வைத்திருந்தால் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசு மார்ச் 31ம் தேதிக்கு பின்னரும்  செல்லாத நோட்டு வைத்திருப்போருக்கு சிறை தண்டனை கிடையாது என தெரிவித்துள்ளது. குறைந்த பட்சமாக ரூ.10,000 மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது