பாஸ்போர்ட் நடைமுறையில் மாற்றங்கள் : மண்டல அலுவலர் தகவல்

மதுரை: ''பாஸ்போர்ட் பெறும் நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்களுக்கு விரைந்து வழங்க வாய்ப்புள்ளது,'' என மதுரை மண்டல அலுவலர் மணிஸ்வரராஜா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மதுரை, திருநெல்வேலி சேவை மையங்கள் மூலம் ஐந்தாண்டுகளில் மட்டும் 11 லட்சத்து 9 ஆயிரத்து 774 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டு மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரத்து 340 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 379 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன.
மத்திய வெளியுறவு அமைச்சகம், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பெறும் நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பிறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், நோட்டரி அபிடவிட்கள் இணைக்க தேவையில்லை என அறிவித்துள்ளதால், விண்ணப்பதாரர்களுக்கு வேகமாகவும், சுலபமாகவும் பாஸ்போர்ட்கள் இனி வழங்க முடியும். மேலும் விண்ணப்பத்துடன் இணைக்கப்படும், 15 சான்றிதழ்களின் எண்ணிக்கை 9 ஆக குறைக்கப்பட்டது. திருமணமானவர்கள், திருமணப்பதிவு சான்றிதழ் அளிக்க தேவையில்லை. விவாகரத்து பெற்றிருந்தால் அதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டாம். பிரிந்து வாழும் கணவன் அல்லது மனைவி பெயரை குறிப்பிட வேண்டியதில்லை. இந்த நடைமுறை டிச., 26ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் இரு சேவை மையங்களிலும், ஐந்து நாட்களுக்கு முன்பே முன்பதிவு முடிந்து விட்டது. இதன் மூலம் 2017 ம் தேதி வழங்கப்படும் பாஸ்போர்ட்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும். இந்த நடைமுறை அமலுக்கு வந்த பின், விண்ணப்பதாரர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர், என்றார்.