புயல் பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் தற்போதைக்கு புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும், புயல் பற்றிய வதந்தியை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாயப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வானம் பகுதியாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தலைஞாயிறு பகுதியில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் கடுமையான வெள்ளம் ஏற்படப் போவதாக சுமூக தளங்களில் வெளியான புரளிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழகத்தில் தற்போதைக்கு புயல் உருவாகும் வாய்ப்பு இல்லை. எனவே, புயல் பற்றிய வதந்தியை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் ஸ்டெல்லா கூறினார்.