பொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு நிகழாமல் தடுக்க, தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்க, தேர்வுத்துறை
முடிவு செய்துள்ளது. ஆண்டு தோறும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், 2,500 மையங்களில் நடத்தப்படும்.
இரு வகுப்புகளிலும், 20 லட்சம் பேர் எழுதும் இத்தேர்வு, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளுடன் நடத்தப்படுகிறது. ஆனால், தேர்வு மையங்கள் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலான நிபந்தனைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. தங்களுக்கு தேவையான வசதிகள் வேண்டும் என்பதற்காக, அதிகாரிகளும், ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளை கண்டு கொள்வதில்லை.
இதனால் கடந்த ஆண்டுகளில், பல தனியார் பள்ளி தேர்வு மையங்களில் காப்பியடித்தல், ஆள் மாறாட்டம் போன்ற முறைகேடுகளும், வினாத்தாள், 'லீக்' சம்பவங்களும் நடந்தன. இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், தனியார் பள்ளிகளில் முறைகேடுகள் நிகழாமல் தடுப்பதற்கான, பல புதிய நிபந்தனைகள் விதிக்க, தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. அதாவது, முறைகேடு புகாருக்கு ஆளாகும் பள்ளியின் தேர்வு மையங்களை நிரந்தரமாக ரத்து செய்யப்படும்; மையங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; விதிமீறல் நிரூபணமானால், பள்ளி அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.