வங்கிகளில் இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுதில்லி: வங்கிகளில் இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதன்முறையாக நட்சத்திர குறியீடு பதிப்பிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் சந்தையில் விநியோகிக்கப்படுகின்றன. இவை 100 நோட்டுகள் கொண்ட கட்டுக்குள் சீரியல் வரிசைப்படி இருக்காது. இது போன்ற 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன. இதனிடையே வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் என்ற வரம்பைத் தளர்த்துவது குறித்து வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.
இன்று திங்கள்கிழமை (டிச.19) முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் விநியோகிக்கப்படும்.
அச்சடித்த புதிய பணம் கைக்கு வராமல் தட்டுப்பாடு நீடிப்பதால் தற்போது குறிப்பிட்ட 24 ரூபாயைக் கூட வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக வங்கிகளால் தர இயலவில்லை. ஆனால், அடுத்த வாரத்திற்குள் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் 500 ரூபாய் நோட்டுகளும் வங்கிகளில் முதலீடு செய்யப்படுவது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த வரம்பை தளர்த்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.