பள்ளிகளுக்கு 3-ஆம் பருவப் பாடப்
புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அரசு, தனியார் பள்ளிகளில்
தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வுகள்
வெள்ளிக்கிழமையுடன் முடிகின்றன. அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை
விடப்பட்டு, ஜன.2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகின்றன.
அதன்படி 3-ஆம் பருவத்துக்கான பாடப்
புத்தகங்கள் கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு அண்மையில்
வந்தடைந்தன. இந்தப் புத்தகங்களை தற்போது பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும்
பணியில் கல்வித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும்
ஆதிதிராவிட நலத் துறை பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை
படிக்கும் சுமார் 2 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம்
வழங்கப்படுகிறது.
மேலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1.14 லட்சம் மாணவ, மாணவிகளுக்கும் புத்தகம் வழங்கப்படுகிறது.
வியாழக்கிழமை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வித் துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து,
மாணவர்களுக்கான புத்தகங்களை பெற்றுச் சென்றனர்.
இந்த புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.