ரூ. 2 லட்சத்துக்கு மேல் டெபாசிட்: பான் எண் இல்லையெனில் வங்கிக் கணக்கு முடக்கம்

வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) சமர்ப்பிக்காமல் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

வெவ்வேறு உத்திகளில் கருப்புப் பணத்தை மாற்ற முயலுபவர்களுக்கு புதிய கடிவாளமிடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, வங்கிப் பரிவர்த்தனைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.

இருந்தபோதிலும், அதையும் மீறி பல்வேறு நூதன வழிகளில் கருப்புப் பணத்தை மாற்ற சிலர் முயன்று வருகின்றனர். ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் கருப்புப் பணத்தை டெபாசிட் செய்து மாற்றுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்த நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்வோர்களுக்கு புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அதாவது பான் எண்ணை சமர்ப்பிக்காமல் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்படும் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக ரூ.5 லட்சத்துக்கும் மேல் பண இருப்பு இருக்குமானால், அதனை திருப்பி எடுக்க முடியாத வகையில் கணக்கை முடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவதற்கான படிவம் 60-ஐ சமர்ப்பித்து உரிய வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகே அந்த வங்கிக் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பிறரது பணத்தை தங்களது வங்கிக் கணக்குகளில் செலுத்த அனுமதிப்பவர்கள், வருமான வரி செலுத்த வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் காட்டாத பணம்


அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் கணக்கில் வராத பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள், வரி மற்றும் அபராதத் தொகையாக 50 சதவீதத்தை மட்டும் செலுத்துவதற்கான வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. கணக்கில் வராத பணம் குறித்த தகவலை தாமாக முன்வந்து தெரிவித்து இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வசூலாகும் கூடுதல் வரி மற்றும் அபராதத் தொகையை ஏழைகள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போவதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் தீர்வு


நாட்டில் நிலவும் பணத் தட்டுப்பாட்டுப் பிரச்னைக்கு அடுத்த மாதத்துக்குள் தீர்வு கிடைக்கும் என்று மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
மின்னணுப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்த அவர், 80 சதவீத பணப் பரிவர்த்தனைகளை மின்னணு சாதனங்கள் வாயிலாக மேற்கொள்வதை உறுதிப்படுத்துவற்கு தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

மின்னஞ்சல் மூலம் தகவல் தரலாம்


கருப்புப் பணம் பதுக்கியிருப்பவர்கள் பற்றி பொதுமக்கள் துப்புக் கொடுப்பதற்காக பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் அதியா, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து மக்கள் தகவல் அளித்தால், அதன்பேரில் சோதனை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
blackmoneyinfo@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கருப்புப் பணப் பதுக்கல் தொடர்பான தகவல்களை அனுப்பலாம் என்றார் அவர்.

கருப்புப் பணம் குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லை

நாட்டில் உள்ள கருப்புப் பணம் குறித்து அரசிடம் அதிகாரப்பூர்வமான மதிப்பீடு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மக்களவையில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அருண் ஜேட்லி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் நாட்டில் எவ்வளவு கருப்புப் பணம் இருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான மதிப்பீடு ஏதுமில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016-ஆம் ஆண்டு நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளின்போது, கணக்கில் காட்டப்படாத வருமானமாக ரூ.31 ஆயிரத்து 277 கோடி இருப்பது சம்பந்தப்பட்டவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.